நியூயார்க் நகரில் மக்கள் கூட்டம் அதிகமான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிக்கும் கருவி மூலம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வயர் இணைப்புகள் வெளிவருகின்ற பிரஷர் குக்கர் என அமெரிக்க ஊடகங்கள் விவரித்திருக்கும் இரண்டாவது சந்தேக வெடிபொருளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சீ பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியிருப்பது தெரிகிறது என்று நியூயார்க்கின் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த தாக்குதலில் தீவிரவாதக் குழுக்களுக்கோ அல்லது நியூஜெர்சியில் ராணுவ அறக்கொடை ஓட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு அருகில் நிகழ்ந்த குழாய் குண்டு வெடிப்புக்கோ தொடர்பு இருப்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.