இந்திய அணிக்கு ‘ஷாக்’: வங்கதேசம் அசத்தல் வெற்றி

முதலாவது ஒருநாள் போட்டியில் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணி அசத்தல் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றது. முதல் போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
மழை தொல்லை: வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், முகமது சர்கார் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 54 ரன் எடுத்த சர்கார் ரன் அவுட்டானார். வங்கதேச அணி 15.4 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்த போது, மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் 5 நிமிடம் நிறுத்தப்பட்டது.
அஷ்வின் ஆறுதல்: மீண்டும் போட்டி துவங்கியதும் அஷ்வின் ‘சுழலில்’ அசத்தத் துவங்கினார். முதலில் தமிம் இக்பால் (60), பின் அறிமுக வீரர் லிட்டன் தாசை (8) அவுட்டாக்கினார். முஷ்பிகுர் ரகிமும் (14) அஷ்வினிடம் சிக்க, போட்டி இந்திய அணி பக்கம் திரும்புவது போல இருந்தது. ஆனால் சாகிப் அல் ஹசன், சபிர் ரஹ்மான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஓவருக்கு ஒரு பவுண்டரி சராசரியாக அடிக்கப்பட, வங்கதேச அணி 34.1வது ஓவரில் 200 ரன்களை எட்டியது. சபிர் (41), சாகிப் அல் ஹசன் (52), நாசிர் ஹொசைன் (34), ரூபல் ஹொசைன் (4), டஸ்கின் அகமது (2) சீரான இடைவௌியில் திரும்பினர். கடைசியாக மொர்டசா (21) அவுட்டாக வங்கதேச அணி 49.4 ஓவரில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரோகித் அரைசதம்: கடின இலக்கைத் துரத்திய இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கத்தில் தடுமாறியது. ரஹ்மான் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த ரோகித் சர்மா தனது 26வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த போது தவான் (30) அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லி (1), ரோகித் சர்மா (63), நீண்ட நேரம் தடுமாறிய ரகானே (9) அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் தோனியும் (5) சாகிப் சுழலில் சிக்க, இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.
சற்று தாக்குப் பிடித்த ரெய்னா (40), அஷ்வின் (0) என, இருவரும் ரஹ்மானின் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. ஜடேஜாவும் (32) பொறுப்பற்ற முறையில் கிளம்பினார்.பின் வந்த மோகித் சர்மா (11), உமேஷ் (2) கைவிட, இந்திய அணி 46 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
புவனேஷ்வர் (25) அவுட்டாகாமல் இருந்தார்.
அசத்தல் அறிமுகம்: அறிமுக பவுலர் முஸ்தபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த தோல்வியால் இந்திய அணி 0–1 என, தொடரில் பின்தங்கியது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி 21ம் தேதி மிர்புரில் நடக்கிறது.